ஆய்வுப் பொருட் சேகரங்கள்

தமிழ் மரபுத் திங்கள்
கனடாவில் தை மாதம் தமிழ் மரபுத் திங்களாக நாடுளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் தமிழர் மொழி, இலக்கியம், கலைகள், பண்பாடு, சாதனைகள், பங்களிப்புக்களை அடையாளப்படுத்தும் வண்ணமும் கொண்டாடும் வண்ணமும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும்.
வடக்குக் கிழக்கின் சிறுபான்மை இனத்தவர் சேகரம்
வடக்குக் கிழக்கின் சிறுபான்மை இனத்தவர் சேகரம் (Minority Ethnic Communities of North-East Collection) இலங்கையின் வட-கிழக்குப் பகுதியில் வாழும் முஸ்லீம் மக்கள், கரையோர வேடர் மக்கள், தெலுங்கு மக்கள் (Sri Lankan Gypsy people), பறங்கி மக்கள், சிங்கள மக்கள் உட்பட்ட சிறுபான்மை இன மக்கள் தொடர்பான பல்வகை ஆவணங்களைத் தொகுக்கும் ஓர் ஆய்வுப் பொருட் சேகரம் (Thematic Research Collection) ஆகும். முஸ்லீம் மக்கள் தொடர்பான விரிவான சிறப்புச் சேகரமாக முஸ்லீம் ஆவணகம் அமைகின்றது. இந்தச் சேகரம் வடக்கு கிழக்கின் சிறுபான்மை இன மக்களின் பூர்வீகம், மொழி, பண்பாடு, கல்வி, பொருளாதாரம், அரசியல், சமூக உறவுகள், எதிர்நோக்கும் சிக்கல்கள் உட்பட்ட விடயங்கள் தொடர்பான ஆய்வுக்கு உதவும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
மலையக ஆவணகம்
மலையக ஆவணகம் இலங்கை மலையகத் தமிழர்களின் பல்வகை ஆவணங்களை எண்ணிம வடிவில் ஆவணப்படுத்தி, பாதுகாத்து, அணுக்கப்படுத்த நூலக நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு சிறப்புச் செயற்திட்டம் ஆகும். இந்தச் செயற்திட்டத்தின் முதன்மை வலைவாசல் நூலகம்:மலையக ஆவணகம் ஆகும். பல்லூடக ஆவணகத்தின் ஆய்வுப் பொருட் சேகரம் (thematic research collection) அந்தச் செயற்திட்டத்தின் ஒரு கூறு ஆகும். செயற்திட்டங்கள் பற்றிய மேலதிக விபரங்களை இங்கே காணலாம்: மலையக ஆவணகம் 2017. இந்தச் சேகரத்தில் உள்ள முழுமையான நூல் விபரங்கள்: நூல்களும் நூல் விபரங்களும், நூல் விபர அட்டவணை.
சாதிய எதிர்ப்புப் போராட்டங்கள்
இலங்கையில் சாதிய எதிர்ப்புப் போராட்டங்கள் இடதுசாரி இயக்கங்களினாலும், ஈழ இயக்கங்களினாலும் பல்வேறு குடிசார் அமைப்புகளினாலும் பல கால கட்டங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் ஆகும். சாதிய ஒடுக்குமுறைகள், அதற்குப் பின்னால் உள்ள சமூக-அரசியல்-பொருளாதாரக் கட்டமைப்புக்கள், எதிரான போராட்டங்கள், அவற்றை முன்னெடுத்த இயக்கங்கள், அவற்றின் கருத்தியல்கள், செயற்பாடுகள், விளைவுகளை பற்றிய பல்லூடாக ஆவணங்களை இச் சேகரம் கொண்டுள்ளது. இது ஒரு ஆய்வுப் பொருட் சேகரம் (Thematic Research Collection) ஆகும்.
மனித உரிமைகள் ஆவணங்கள் சேகரம்
மனித உரிமைகள் ஆவணங்கள் சேகரம் (Human Rights Documents Collection) என்பது இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான ஆய்வுக்கு, செயற்பாடுகளுக்கு உதவும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு வரும் ஆய்வுப் பொருட் சேகரம் (Thematic Research Collection) ஆகும். இது தற்போது மனித உரிமை அமைப்புகள், ஐ.நா நிறுவனங்கள், அரசு மற்றும் பிற அமைப்புகள் 1975 காலப் பகுதியில் இருந்து 2005 காலப்பகுதி வரை வெளியிட்ட ஆவணங்களைக் கொண்டுள்ளது.
அஞ்சலியல்
அஞ்சலியல் என்பது அஞ்சல் தலைகள், அஞ்சல் முறைமைகள், வரலாறுகள் அவற்றுடன் தொடர்புடைய அஞ்சல் எழுது பொருட்கள், அஞ்சல் குறிகள் போன்றவற்றின் சேகரிப்பு, ஆய்வு தொடர்பான துறையாகும். அஞ்சலியல் ஆவணங்கள் ஒரு சமூகத்தின் தொட்டுணரக்கூடிய (tangible), காண்பிய வரலாற்று (visual/ pictorial history) ஆவணங்களாக விளங்குகின்றன. இச்சேகரம் இலங்கையின் காலனித்துவ, பின்காலனித்துவ காலப்பகுதியில் இடம்பெற்ற உள்நாட்டு மற்றும் நாடுகடந்த தமிழ் வணிக பரிமாற்ற அஞ்சலியல் ஆவணங்களைக் கொண்டுள்ளது.
வடக்கு மாகாண நீர் வளங்கள்
இலங்கையின் வடக்கு மாகாணத்துடன் தொடர்புடைய நீர் வளங்கள் தொடர்பான எல்லாவிதமான ஆவணங்களையும் சேகரிக்கும் முயற்சி.
சுவடிகள் ஆவணமாக்கற் செயற்றிட்டம் (EAP1056)
EAP 1056 is a project sponsored by Endangered Archives Programme of British Library supported by Arcadia
ந.ந.ஈ.தி.கே+ ஆவணகம்
நங்கை, நம்பி, ஈரர், திருனர் மற்றும் ஈர் முறையில் சேராத பாலின-பாலீர்ப்பினர்கள் (LGBTQ) தொடர்பான ஆய்வுப் பொருட் சேகரம் (Thematic Research Collection). இலங்க்கைத் தமிழ் பேசும் சமூகங்களில் அவர்களது வரலாறு, வாழ்வுமுறை, பண்பாடு, அனுபவங்கள், சிக்கல்கள், உரிமைப் போராட்டம் போன்றவற்றை ஆவணப்படுத்தும் பல்லூடகச் சேகரம்.
பாரம்பரிய நெல்
பாரம்பரிய நெல் இனங்களை இயற்கை வழியில் உற்பத்தி செய்தல் தொடர்பான தரவுகளைத் திரட்டும் சேகரம்.